Monday, December 15, 2014

உலகத்தை திணற வைக்கும் திருநள்ளாறு........

உலகத்தை திணற வைக்கும் திருநள்ளாறு........

இன்று பல நாடுகள் செயற்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 விநாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3 விநாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் அது வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில் அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.
இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்ந்து கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல. உலகையே மிரள வைத்தது. ஆம் எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவில் தமிழ்நாடு அருகில் உள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான் பகுதியை கடக்கும் 3 விநாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக் கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலக் கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கிறதாம். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸதம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில் செயற்கைக் கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இந்த இடம்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நாசாவிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்துவிட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து வணங்கிவிட்டு சென்றனர்.
இன்று வரை விண்ணில் செயற்கைக் கோள்கள் திருநள்ளாறைக் கடக்கும்போது
ஸதம்பித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த செய்தியால் பிரமிக்காதவர்கள் யாருமில்லை.
இந்தச் செதியால் நம்முடைய முன்னோர்களை எண்ணி நாம் பிரமிக்கத்தான் வேண்டியுள்ளது. நாம் பலவிதமான செயற்கைக் கோள்களைக் கொண்டு
ஆராயும் சனிக்கோள் கதிர் வீச்சு விழும் பகுதியைக் கண்டுபிடித்து அங்கொரு
கோயிலையும் கட்டி கதிர்வீச்சு அதிகம் விழும் நாட்களையும் கண்டறிந்து அந்த
நாளுக்கு சனிப்யெர்ச்சி என்று அழைக்கும் அவர்களின் திறமையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட நம் முன்னோர்களை நம்மால் நினைத்து பிரம்மிக்க இயலாமல் இருக்க முடியவில்லை. 

இவற்றையெல்லாம் விஞ்சும் விஷயம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு சிவன்
கோவிலுக்கும் சென்று அங்குள்ள நவக்கிரகங்களைப் பாருங்கள். ஒவ்வொரு கதிர்வீச்சுகளுக்கேற்ப அச் சிற்பங்களுக்கு ஆடைகளும். அங்க வஸ்திரங்களுக்கும் அணிவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இந்த அதிசயங்களை நாம் அறிந்து கொள்வதற்கு அவர்கள் கையாண்ட வழி முறைகளில்ஒன்றுதான் கடவுள் மார்க்கம் என்று கருதுகிறேன். அவர்கள் போட்ட புதிருக்கு இன்று வரைக்கும் விளக்கம் தெரியாமல் அறிவியலின் துணையோடு நாம் அலைந்து கொண்டிருக்கிறோம்.
                                                                                                        - சுபாஷ்சந்திரன், பொன்மலர், நவம்பர் 2011

Tuesday, November 25, 2014

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறீர்களா?
உங்கள் நடைமுறை பழக்க வழக்கங்களை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.
நமது நடைமுறை பழக்க வழக்கங்களை 
மாற்றிக் கொள்வதன் மூலம் அவற்றை எளிதில் அடையலாம்

தினசரி வாழ்விற்கு முழுக் கவனத்தன்மை பயிற்சி
நூல் வழிகாட்டுகிறது.
அருமையான படைப்பு... அற்புதமான கருத்துகள்...
வாழ்க்கைக்கு உதவும் நல்ல நூல்களில் இதுவும் ஒன்று....
வாருங்கள் வாசிக்கலாம்.....

கிராபிக்ஸ் பா. கண்ணன்

Friday, October 31, 2014

திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் சிறப்பாசிரியராக நாம் பணியாற்றிய போது நிகழ்ந்த கரிசல் திரைவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறையில் சிறப்பாசிரியராக நாம் பணியாற்றிய போது நிகழ்ந்த கரிசல் திரைவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சிறப்பு விருந்தினராக ரேணிகுண்டா படக் கதாநாயகன் நடிகர் ஜானி
கலந்து கொண்டார்.

எமது இனிய மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் அனிமேஷன் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ் போன்ற துறைகளில் வெற்றி வாகைசூடி வருவது எமது துறை சார்ந்த இலக்காக நாம் எடுத்துக் கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

Thursday, October 9, 2014

grafixkannan_kovilpatti Neelamani

கோவில்பட்டி நீலமணி 

கோவில்பட்டி நீலமணி. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் பத்திரிகை மூலமாக தென்னகத்தில் கவிஞராக தென்னக மக்களிடம் அறிமுகமானார். 02.07.1941 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் சங்கரலிங்கம்பிள்ளை -
இலக்குமியம்மாள். ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில் இவர் எழுதிய குயில் சொன்ன கதை மூலமாக பாவேந்தரின் அறிமுகம் கிடைத்தது. பாவேந்தரும் இவரின் கவிதை எழுதும் ஆற்றலைக் கண்டு வியந்து தமது கைப்பட வாழ்த்துமடல் ஒன்று எழுதிக் கொடுத்தார். பள்ளியிறுதி படிப்பு வரைக்கும் பயின்ற இவர், பின்னர் பண்டிதர்கள் போல் தாமும் கவிதைகள் இயற்றத் தொடங்கினார்.  இவர் கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலகத் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.


குயில், காவியப் பாவை, கண்ணதாசன், வண்ணச்சிறகு, தீபம், கவிதை போன்ற பல்வேறு இதழ்களிலும் கவிதைகள் எழுதினார்.  இவரின் தமிழார்வம் மா.பொ. சிவஞானம் அவர்களின் நட்புக் கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. பாண்டிச்சேரி அரசாங்கம் நடத்திய பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் இவரது கவிதை இயற்றும் ஆற்றலைக் கண்டு பாரதி பட்டயமும், சான்றும் வழங்கியது. 

பனிரெண்டாம் வகுப்பு சிறப்புத் தமிழில் இவர்
தமிழ் அன்னையை ஊஞ்சலில் ஆட வைத்து மகிழ்ந்த ஆடாய் ஊஞ்சல் பொன்னுஞ்சல் என்னும் பாடலை, பாடப்  புத்தகத்தில் வைத்து கெளரவித்தது. அதனைத் தொடர்ந்து இவர் என் பாடல் இனிக்கும், என் கவிதைகள் என மரபுக் கவிதை நூல்களை எழுதினார்.

காலப் போக்கில் இயற்கையின் அழகுகளையும், தனி மனிதர் உரிமைகளையும் பாடிக் கொண்டிருந்த இவரது எண்ணம் இறைவடிவமாக மாறத் தொடங்கியது.

ஆம் கவியரசு கண்ணதாசன் அவர்களைப் போல் இறைவன் மீது பாடல்கள் இயற்றத் தொடங்கினார். கண்ணதாசன், கண்ணனை மையமாகக் கொண்டு பாடல் இயற்றியது போல் இவர் தமிழ்க் கடவுள் முருகன் மீது பாடல்கள் இயற்றத் தொடங்கினார்.


திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் போற்றுவது போல் ஒரு முகம் ஆறு திருக் கரங்களும் கொண்டு எழுந்தருளியிருக்கும்
கழுகுமலை முருகன் மீது  பாடல்கள் பாடத் தொடங்கினார்.  இவர் இயற்றிய தெய்வமலர்கள், கழுகுமலை கந்தகவசம், கழுகுமலை கந்தனலங்காரம், கழுகுமலை சந்தத் தமிழ்,
கழுகுமலை திருப்புகழ் அந்தாதி, கழுகுமலை மணிமாலை.

கோவில்பட்டி காவல்தெய்வம் --செண்பகவல்லி அருள்மாலை, செண்பகவல்லி நூற்றந்தாதி என பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.
இவரது கவிதைத் திறன் நாளடைவில் கவியரசு கண்ணதாசன்  அவர்களை சென்றடைந்தது. நாளடைவில் கவியரசுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினையும் பெற்றார்.

இவரது பாடல்களில் குடிகொண்டு
ஆட்சிப் புரிந்த தமிழின் சொல்லழகைக் கண்ட
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சுவாமிகள் அவர்கள்:-
இனிய அன்பர் கோவில்பட்டி நீலமணி அவர்கள் ஒரு நல்ல கவிஞர். தமிழார்வலர் இவர் இயற்றிய கழுகுமலை கந்த கவசம் என்ற நூலை படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. கவிதை இனிய தமிழிலில் எளிய நடையில் அமைந்துள்ளது. ஒரு நல்ல பக்தி நூலைப் படித்த மன நிறைவு, மகிழ்ச்சி. இத்தகு படைப்புகள் பலவற்றைக் கவிஞர் தருவாராக வாழ்த்துகள். - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சுவாமிகள்.

ஜகத்குரு. காஞ்சிப் பெரியவர் அவர்கள் ஆசீர்வாதம்:
காவடிச் சிந்து கண்டு மகிழ்ந்த கழுகுமலைப் பெருமான் இப்பொழுது கவசம் கண்டு மகிழ்வதையறிந்து சந்தோசிக்கிறோம். கவசம் யாத்துள்ள கோவில்பட்டி நீலமணிக்குக் கழுகுமலைப் பெருமான் அருள் பூர்ணமாகக்கிட்டி மேலும் பல நூல்கள் யாத்திடும் பெரும்பேறு கிட்ட ஆசீர்வதிக்கிறோம் - ஜகத்குரு. காஞ்சிப் பெரியவர் அவர்கள் ஆசீர்வாதம் வழங்கினார்.

திருமுக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
மூவேந்தர்களின் தனிப் பெருந் தலைவனாம் -முருகப் பெருமான் ஒரு திருமுகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு எங்கும் இல்லாத புதுமையுடன் கழுகுமலையில் எழுந்தருளியிருக்கிறான். இப் பெருமானை இடையறாது சிந்தித்து வந்தித்து வாழ்த்துகின்ற அடியவர் திரு. நீலமணி என்பவர் இவர் கழுகுமலை கந்தவேள் மீது கவசம்பாடித் தமிழ் மக்களுக்கு உதவுகின்றார். இதனை ஏனோரும் ஓதி உய்வார்களாக - என திருமுக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

கவியரசு கண்ணதாசன்:
அற்புதப் பாக்கள் கொண்ட
அருட்தெய்வமலர்கள் கண்டேன்.
கற்பனை வளத் திறன்மிக்க
கடவுட்பா இசைத்தார் பாடல்.
விற்பனர் இவரை அந்த
வியத்தகும் தெய்வம் காக்கும்
பொற்புகழ் நீலவண்ணன்
பொலிக பல்லாண்டு காலம்.

நீலமணி நெஞ்சத்துள் நிறைந்த நண்பர்
நிலைகோவில் பட்டிநகர்
பிறந்த தோழர்.
கோலமிகும் கவியாத்த
கொள்கைச் செம்மல்
குணத்தாலே பிறர் மனத்தைக்
கொள்ளை கொண்டார்.
ஆலமரம் போல்நின்று
தழைத்து வாழ்க.
அழியாத பாடல்பல
இயற்றி வாழ்க.
சாலஇவர் பெயர் இந்தத்
தரணி எங்கும்
சரிதத்தில் இடம்பெறவே
தலைவன் செய்க.

என கவியரசு கண்ணதாசன் அவர்களும் தம் கைபட வாழ்த்துமடல் எழுதியுள்ளார்கள்.

இவர் எழுதிய தமிழ்க் கவிதைகள் பலவற்றை காலஞ்சென்ற இசை மாமேதை மதுரைசோமு அவர்கள் எண்ணற்ற மேடைகளில் பாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து கழுகுமலை ஏ. கந்தசாமி அவர்களும் இவரது பாடல்களை பல்வேறு மேடைகளில் பாடியுள்ளார். இவர் எழுதிய அண்ணாமலை மன்றம் சாட்சி சொல்லும் என்ற பாடலை கழுகுமலை ஏ. கந்தசாமி அவர்கள் அண்ணாமலை மன்றத்தில் பாட, அந்தப் பாடல் அன்றைய நாளிதழ்களில் அண்ணாமலை மன்றத்தின் தேசியகீதம் போல இனிமையாக ஒலித்தது என சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டது.

பின்னர் இவர் எழுதிய தெய்வமலர்கள் என்னும் நூலில் இடம்பெற்ற
உன்னாலே என் பாடல் இனிக்கின்றது என்னும் இனிய பாடலானது
சென்னைத் தொலைக் காட்சி நிலையத்தில் பிரபல திரையுலக பாடகர்
பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடினார். இந்தப் பாடலுக்கு உபேந்திரகுமார் இசையமைத்திருந்தார். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த் அவர்களும் கழுகுமலை முருகன் பாடல்களை ஒலிநாடாவாக வெளியிட முன்வந்தார்.


 1960 இல் இவரது நண்பர்களான தமிழ்க்கனல், முல்லை நெல்லையப்பன், பொ.மா.ராசாமணி போன்றவர்களுடன் இணைந்து தென்னகத்தில் முதல் பாட்டுக் கவியரங்கத்தை அரங்கேற்றினார்கள்.


கி,வா.ஜகநாதன்:
அன்புமிக்க நீலமணி. அவர்களுக்கு வணக்கம். நலம்.
தாங்கள் 18.09.1992 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது.
எனக்குத் திரு. ராசா அண்ணாமலை செட்டியார் அவர்கள் விருது கிடைக்க இருப்பதைப் பாராட்டி எழுதியதற்கு நன்றி.

எல்லாம் முருகன் திருவருளும், என் ஆசிரியப் பிரானுடைய ஆசியும் தரும் நலன்கள் என்று நம்புகிறேன். இசைப்பாட்டில் விநாயகன் ‘றன’ புகழும் வேற்கை இளமுருகன் பெரும்புகழும் இசைத்துப் பாடி
நசைப் பாட்டைப் பலபடியாகக் காட்டி
நண்ண வைத்தான் உயர் கோவிற்பட்டி வாழ்வோன்
திசைப் பாரெல்லாம் புகழ இந்தப் பாக்கள்
கீர்த்திப் பெறும் அன்பர்கள் போற்றிப் பாட
அசைப்பரிய கிளர்ச்சியுடன் ஓங்க வேண்டும்
ஆசிரியர் வாழ்கவென வாழ்த்துகின்றேன்.

      - கி,வா.ஜகநாதன்,  காந்தமலை, 2, நார்ட்டன்        முதல்தெரு, சென்னை 28

நன்றி மு.வலவனின், இலக்கியப் புரவலர் யார்? எவர்?

Monday, September 22, 2014

எமது இனிய நண்பரும் சகோதரருமான ஓவியர் திரு. மாரீஸ்

தினகரன், வணக்கம் திங்கள் பகுதியில் 22.09.2014 இன்று கோவில்பட்டி ஓவியர் கொண்டையராஜு அவர்களின் சீடர் ஓவியர் திரு. டி.எஸ். சுப்பையா அவர்களின் புதல்வரும், எமது இனிய நண்பரும், சகோதரருமான ஓவியர் திரு. மாரீஸ் அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது.

Thursday, September 4, 2014

சிவனைப் பற்றி அப்துல் கலாம்

சிவனைப் பற்றி அப்துல் கலாம்
ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம் மதித்தே ஆகவேண்டும்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?!
அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்

Monday, August 25, 2014

மகத்துவம் நிறைந்த இந்துமதம். (சிதம்பர ரகசியம்)













விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது.

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கே கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது

Tuesday, June 24, 2014

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் வாழ்த்து

தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகள்ஏமாற்றங்கள், துரோகங்கள் அனைத்தையும் தம் பாடல்
வரிகளில் கோடிட்டுக் காட்டியவர் கண்ணதாசன் அவர்கள்.

1944 ஆம் ஆண்டு திருமகள் ஏட்டில்

கார்கூந்தல் பின்னலிட்டுக்
காத்திருந்தேன் உம்வரவை
கடைக் கண்ணால் பார்த்திருந்தேன்.
கண்ணில் தெரிந்திலை நீர்
கனவுலகில் சஞ்சரித்தேன் என்ற வைர வரிகளுடன்
தொடங்கிய அவரின் இலக்கிய பயணம்

பல பாடல்களை, பல இலக்கியங்களையும்,
பல இதிகாசங்களையும் தனது வரிகளில் சுட்டிக் காட்டியவர்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
அறிந்து கொள்ள...
கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள

”கண்ணதாசன் கதை” என்ற நூலை வாசியுங்கள்
காலமுள்ள வரைக்கும் அவர் பாடல்களை நேசியுங்கள்.

கவியரசு பற்றி நான் எழுதிய கவிதை
எமது ”பேஜ்மேக்கர்” நூலில் காண்க.

கவியரசு கவிதைப் பெண்ணாக எம் கருவின் உருவாகவும்
கொண்டு எழுதிய பாடலது...


மற்றுமொரு கவிதை இதோ

”கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான்  - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அந்த
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அவன்
மறைகின்ற போது கூட காட்ட மறந்தான்.

கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.”

பாடல்கள் சில கோடி பாடி வைத்தான் - தமிழ்
பாடல்கள் சில கோடி பாடி வைத்தான். - அவன்
பாட்டினை நான் பாட ஏன் மறுத்தான்-
வீணையின் நாதத்தை விரலில் வைத்தான் -என்
விரலின் நாதத்தை ஏன் அறுத்தான்.
வீதியின் கீதத்தை பாட்டில் வைத்தான். என்
விதியின் விளையாட்டில் கவனம் வைத்தான்.

கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.

காதலின் பெருமையைச் சொல்லி வைத்தான் - என்
கோலத்தின் பொருளினை எண்ணிச் சிரித்தான்.
அலைஅலையாய் பொங்குகவி சமைத்தான் - அன்னை
மலையரசியின் நாவில் இடம்பிடித்தான்.
கண்ணன் மீது காதல் கொண்டான் - மாயக்
கண்ணன் மீது காதல் கொண்டான் - இந்தக்
கண்ணனுக்கும் அவனே பெயர் கொடுத்தான்.

கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.

குரு கண்ணதாசன் அவர்களுக்கு எம் சமர்ப்பணம்.
பா.கண்ணன்
கோவில்பட்டி.

Friday, June 6, 2014

grafixkannan-bookreading-2

சிறகுகள் சுமையாவதில்லை - 2

அன்பே பணமே ஆருயிரே:
ஒரு விஷயத்தில் நமக்கிருக்கும் ஆர்வம், தெளிவு ஆகிவற்றை மட்டும் வைத்து அவற்றில் நாம் முன்னேறி விட முடியாது. 
அது தொழிலாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எந்தவொரு செயலாக இருந்தாலும் சரி இதுதான் அடிப்படை. அப்படியானால் அதில் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் நமக்குள் எழுவது இயற்கை. அதற்குப் பதில் நிர்வாகத் திறமை என்பதாகும்.
ஆம் தொழிலாக இருந்தாலும் அதனை நிர்வகிக்கும் தன்மையைப் பொறுத்தே அவற்றின் வெற்றி தோல்விகள் நடக்கின்றன.

இது பண விஷயத்திலும் உண்மையே.

பணம் பற்றி எந்தவிதமான தெளிவுமின்றி நாம் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் பணம் முக்கியமில்லை என்ற வார்த்தையை நம் வீட்டில் இருந்த பெரியவர்களோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களோ அல்லது நமக்கு வேணடியவர்களோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமேலே பணத்தைப் பற்றி தெளிவில்லாமலே பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம் இதுதான் முக்கியமான விஷயம்.

இந்நூல் பணத்தைப் பற்றிய தெளிவினையும் அதைப் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்துகிறது.

பணம் இல்லை என்றால் இன்றைய கால கட்டத்தில் எதையும் நம்மால் சாதிக்க முடியுமா?
முடியாது என்றுதான் நம்மால் சொல்ல முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த பணத்தைப் பற்றிய விளக்கம் மிக முக்கியமானதும்கூட,
அதனை தெளிவாகவே விளக்குகிறது.

புத்தகத்தின் அட்டையே நமக்குத் தேவையான அல்லது நாம் பணத்தை பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆம் பணம் பற்றிய விஷயத்தில் நாம் இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்நூல்.

பணத்தைப் பற்றிய அடிப்படைச் செய்திகள் மட்டுமின்றி
பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதைப் பற்றியும் நமக்குத் தெள்ளத் தெளிவாக இந்நூல் 
ஆசிரியர் திரு. சுரேஷ் பத்மநாபன் அவர்கள் விளக்குகிறார்.

பணத்தை நாம் எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறோமோ அல்லது
பணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோமோ அதே
அளவிற்கு பணமும் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
பணைத்தை எப்படி அடைவது என்பதை மட்டும் சொல்லாமல் அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

1. பணத்தின் முக்கியத்துவம்.
2. பணமும் அடிப்படைத் தேவைகளும்.
3. பணம் சரியாகக் கையாளும் முறையும் குறிப்புக் கையோடும். 
4. பணம் தொடர்பான சம்பிரதாயங்கள். 
5. பணம் சிந்தனையில் முளைவிட்டு நிசமாக மலரும் தொடர் கட்டங்கள். 
6. பணமும் ஊறிப் போயிவிட்ட பழக்கங்களும். 
7. பணமும் சுபாவமும். 
8. பணம் தனிப்பட்ட ஆற்றல்கள். 
9. பணம் செலவும் சேமிப்பும், 
10. பண உத்திகள். 
11. பணமும் குடும்பமும். 
12. பணமும் நிறுவனமும்

என மொத்தம் பன்னிரெண்டு விதமான அத்தியாயங்களில் பணம் பற்றி தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இந்நூல் ஆசிரியர் விளக்குகிறார்.
பணம் பற்றி மேலும் அறிந்து கொள்ள திரு. சுரேஷ்பத்மநாபன் அவர்கள்
பண பயிலரங்களும் நடத்துகிறார்.


பணம் பற்றிய தெளிவிற்கு
அன்பே ஆரூயிரே பணமே என்ற நூல் பெரிதும் உதவுகின்றன.
நூல் வெளியீடு - கண்ணதாசன் பதிப்பகம்
ஆசிரியர் - சுரேஷ் பத்மநாபன்.

Tuesday, May 13, 2014

Best Books follows

சிறகுகள் சுமையாவதில்லை -1
 -கிராபிக்ஸ் பா. கண்ணன்.

ஷாட் ஹெம்ஸ்டெட்டர் அவர்கள் எழுதிய
நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு -
நூலை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். - நாம் அனைவருமே
காப்மேயரின் நூல்களோடும் மற்றவர்களின் நூல்களோடும் வாழ்ந்து இருக்கிறோம். வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்.

பாவேந்தர் பாரதிதாசன், ம.பொ.சி. கவியரசு கண்ணதாசன், நெல்லைக் கண்ணன், தமிழ்க்கனல், பொ.ம,ராசாமணி, கி.வ.‍சகநாதன் என இலக்கியவாதிகளோடு பழகியதோடு மட்டுமின்றி தானும் ஒரு இலக்கியவாதியாகத் திகழ்ந்தவர் என் தந்தை. என் ஏழாவது வயதில் என்னை பொதுநூலகத்திற்கு அழைத்துச் சென்று உறுப்பினராக்கி, எதிர்காலத்தில் உனக்குப் பக்கபலமாக இருக்கக் கூடிய நண்பர்கள் இவர்கள் தான் என்று நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்கக் கற்றுக் கொடுத்தவரும் இவரே.

இலக்கியம் சோறு போடாது என்பதும் என் தந்தையின் கருத்து. இலக்கியம் சோறு போட்டதோ இல்லையோ - இலக்கியம் எனக்கு எழுதும் ஆற்றலைக் கொடுத்தது - மற்றவர்களின் மனதைப் படிக்கும் திறமையைக் கற்றுக் கொடுத்தது. எதிர்வரும் சூழ்நிலைகளை சமாளிக்கும் வல்லமையைக் கற்றுக் கொடுத்தது. அதுபோல் கணினித் தமிழ் நூல்களை எழுதும் ஆற்றலைக் கொடுத்தது. கணினித் தமிழ் நூல்களை எழுதும் பொழுது படிக்கின்றவர்களின் மனநிலையில் இருந்து பார்க்கும் தனித் தன்மையைக் கொடுத்தது.

கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு இராம. கண்ணப்பன் அவர்கள் எப்படி பிரதியெடுத்துக் கொடுப்பாரோ அதே போல் என் தந்தையின் இலக்கிய வடிவங்களுக்கு பிரதியெடுத்துக் கொடுப்பது என் வழக்கம். அவ்வழியில் இலக்கியம் எனக்குப் பரிட்சயமானது.

என் பள்ளி நாட்களில் கண்ணதாசன் அவர்களின் திரைப்படப் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பாடிக் கொண்டே திரியும் பழக்கம் எனக்கு உண்டு. அவரின் கவிதை வரிகளை வாசித்து அதேயே மாடலாகக் கொண்டு கவிதைகள் எழுதிய- பழகிய நாட்களும் உண்டு. அவரை என் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் முதல் கவிதை அன்னை இந்திரா! (இந்திரா காந்தி அவர்களின் மறைவு பற்றிய கவிதை). அப்பாவின் நண்பர் மதிப்பிற்குரிய திரு. தமிழ்க்கனல் அவர்கள் எனக்கு இலக்கியத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுத்தார். ஒரு வரி எழுதாமல் சோற்றில் கை வைக்காதே - உத்தரவும் போடுவார்.

என் தந்தைக்குத் தெரியாமல் கவிதைகள் எழுதுவதும், அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதும் என் வழக்கமானது. பத்திரிகையில் வெளியானவற்றைப் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போவார். எனக்குள் இனம் புரியாத தேடல்கள் இருந்து கொண்டே இருந்தன.
அது என்ன? கண்ணதாசன் அவர்களைப் போல் வார்த்தைகள் சரளமாக வந்து விழவில்லையே.

யாரிடம் கேட்பது? யாரைக் கேட்பது? இந்நிலையில் மதிப்பிற்குரிய இலக்கிய மேதை, சொல்சித்தர் நெல்லைக் கண்ணன் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யார் நீ என்பது போல் பார்த்தார்.
நீலமணியின் (கோவில்பட்டி) பையன் என்றேன். அப்பா நலமா?
உனக்கு கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டா என்றார்.
ஆம். ஆனால் வார்த்தைகள் சரளமாகக் கிடைக்கவில்லை என்றேன்.

வார்த்தைகள் பஞ்சமில்லாமல் கிடைக்க வேண்டுமானால் கம்பராமாயணத்தின் பாடல்களை (பத்தாயிரம் பாடல்கள்) எவ்வளவு மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவு பாடல்களை மனப்பாடம் செய். வார்த்தைகள் வற்றாது வந்து விழுந்து கொண்டேயிருக்கும் என்றார்!?
ஒருவேளை கண்ணதாசன் அவர்கள் கம்பராமாயணத்தின் பத்தாயிரம் பாடல் களையும் மனப்பாடம் செய்திருப்பாரோ என்னவோ! அன்றைய கல்வி அட்சய பாத்திரம் போன்றது!

சுமார் 100 பாடல்கள் வரைக்கும் மனப்பாடம் செய்தேன். அதற்கு மேல் என் மனதில் பாடல்கள் பதியவில்லை. நெல்லைக் கண்ணன் அவர்களின் வார்த்தைகளில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதை 100 பாடல்களே எனக்குச் சொல்லிற்று. ஒரளவு வார்த்தைகள் வந்து விழத் தொடங்கின. என் சக நண்பர்களும், மற்றவர் களும்  நினைத்தவுடன் கவிதைகள் எழுதுகிறாய் என்று வியப்பது எனப் பெருமை யாக இருந்த நாட்கள் மாறி போய், கணினித் தமிழ் நூல்களை எழுதும் நிலையை நான் அடைந்தது கூட ஒரு வகையில் என் சுயபேச்சின் காரணமாகவும் இருக்கலாம்!?  மேலே சொன்னவை என் இலக்கியப் பயணத்தின் ஆரம்ப நிலைகள் பற்றியவை. இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? - நீங்கள் கேட்கின்ற - கேள்விகள் எனக்குப் புரிகிறது. சுயபேச்சு பற்றிய நூல்தானே இவை? எனக்குக் கிடைத்த வெற்றி அல்லது இலக்கிய வாய்ப்புகள் கூட என்னுள் எழுந்த சுயபேச்சின் அடையாளமாகவும் இருக்கலாம் அல்லவா?

நாம் நம் மனசுக்குள் புலம்புவதும் பழக்கமான ஒன்று தானே?
தேவையானவற்றை விடுத்து - தேவையற்றவற்றை மனசுக்குள் வீசுவதும் நம் வழக்கம் தானே? நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள் - இது மதங்கள் கடந்து, இலக்கியம் கடந்து ஏன் இலக்கிய வாதிகளைக் கடந்து வாழ்ந்த - வாழ்கின்ற அனைத்து பெரியோர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகள். அதைதான் இந்நூல் வெளிப்படுத்துகிறது.  

வாழ்க்கையில் உயரவேண்டுமானால் நாம் உயர்ந்து விட்டது போன்ற வரை படத்தை நம் மனதிற்குக் கொடுக்க வேண்டும். நாம் விரும்பும் பணத்தை வேண்டுமானால் அத்தகைய பணத்தைப் பெற்றுவிட்டது போன்ற நினைப்புடன் கூடிய வரைபட வடிவத்தை நம் மனதிற்குக் கொடுக்க வேண்டும்.
விளையாட்டில், கவிதையில், காமெடியில், வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பது போன்றதொரு தோற்றத்தை நாம் நம் மனதிடம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அது நமக்குக் கிடைக்கும் என்று நூல் விவரிக்கிறது.

நாம் நம் மனதிற்குக் கொடுக்கின்ற வரைபடத்தை
(1) எதிர்மறை - ஏற்புநிலை
(2) சுயபேச்சு - மாற்றத்திற்கான தேவையை அங்கீகரிக்கும் நிலை.
(3) மாறுவதற்கான தீர்மானம் - மேற்கொள்ளும் நிலை
(4) சுய பேச்சு - மிகச் சிறந்தவராகும் நிலை
(5) சுயபேச்சு - சுய பிரகடனம் என மொத்த ஐந்து நிலைகளாகப் பிரித்து ஆராய்கிறது இந்நூல். மற்ற நிலைகளை விட இறுதி இரண்டு நிலைகளும் நமக்குப் பெரும் உதவியாக இருப்பதுடன் நாம் உயர்வதற்கு வழி வக்கும் என்று இந்நூல் கூறுகிறது.

முயன்றுதான் பார்ப்போமே!

நூல் - நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு.
நூல் ஆசிரியர் -   ஷாட் ஹெம்ஸ்டெட்டர்
நூல் வெளியீடு - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்