Monday, March 12, 2018

நெல்லையில் நேற்று.....ஆல்ஃபா தியானம்- நாகூர்ரூமி அவர்கள்

நெல்லையில்....நேற்று......

நடுத்தர மக்களுக்கு -
பணக் கஷ்டமிருக்கிறதோ இல்லையோ
மனக் கஷ்டம் நிறையவே இருக்கிறது.
இன்றைய சூழலில் -
இயற்கை இவர்களுக்கு
பாதுகாப்பாக இருக்கிறதோ இல்லையோ
பயமுறுத்துவனவாகவே இருக்கிறது.

மழைபொழிந்தால் அதை அப்படியே
ஏற்றுக்கொள்.
வெயில் அடித்தாலும் அதை அப்படியே
ஏற்றுக்கொள் - எனச் சொல்லும்
ஜென் தத்துவங்களை இவர்கள்
ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ
இயற்கையின் கோரப்பிடிகளுக்குள் அவ்வவப்போது
இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

இவர்களின் இன்றைய தேவை
மனக் கஷ்டங்களிலிருந்து மீள்வது எப்படி
என்பனவாகவே இருக்கிறது. இவர்களை
மீட்டெடுக்கப் போவது யார்?

ஒரே பதில் தியானம் என்கிறார்கள்,
அறிவார்ந்த சிலர்.

ஒரு தியானம் இவர்களுக்கு
சொர்க்கத்தைக் காட்டுகிறதோ இல்லையோ,
செல்வத்தைக் கொண்டு வந்து
கொட்டுகிறதோ இல்லையோ- இவர்களின்
மனஉளைச்சலுக்கு மருந்திட்டால்
போதுமானதாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
அதற்குப் பயன்படுகிறது இத் தியானம்.

பொதுவாக மனஒருமைப்பாடு பற்றி எனது தாத்தா (அம்மாவின் அப்பா)
பயிற்சி கொடுத்திருக்கிறார். அவர் சொல்லிக்கொடுத்தது
மனதை ஒருமுகப்படுத்துவதற்குதான்.
இதுதான் தியானமா என்பது பற்றியெல்லாம்
அப்பொழுதும் தெரியாது- ஏன்
இப்பொழுதும் முழுமையாகத் தெரியாது.

எது ஒன்றின் மீது மனதை ஒருமுகப்படுத்தினாலும்
மனம் லோசானதுபோல் தோன்றும்.

அந்த வகையில் - நெல்லையில் நேற்று....

திருநெல்வேலி அக்குபஞ்சர் மற்றும் புறநிலை சிகிச்சை மையம்
சார்பில் நடந்த ஆழ்நிலை தியானம் வகுப்பில்
ஆல்ஃபா தியான குருவும் பேராசிரியருமான திரு. நாகூர் ரூமி அவர்கள்
கலந்துகொண்டு சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.

தியானங்கள் பலவகைப்பட்டாலும் அவற்றில் தற்சமயம்
ஆல்ஃபா தியானம் பரவலாக அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

இத் தியானம் பற்றி இதுவரை நான் கேள்விபட்டிருந்தாலும் - பல
நூல்களில் அவற்றைப் பற்றி படித்து அறிந்திருந்தாலும் நேரடியாக அனுபவித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது.
திரு. நாகூர்ரூமி அவர்களின் (ஏறக்குறைய)
எல்லா நூல்களையும் படித்திருந்தாலும்,
அவரது நேரடி வகுப்பில் கலந்துகொள்ளும்
வாய்ப்பு முதன்முதலில் நெல்லையில் ஏற்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரு.நாகூர்ரூமி அவர்களை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தபோது மூச்சுப் பயிற்சிப் பற்றியும், கொஞ்ச நாளைக்கு மூச்சு உள்ளே சென்று வெளியே வருவதைக் கவனித்து வாருங்கள். அதைவிட மிகவும் முக்கியம் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஏறக்குறைய பேச்சின் மூலமாகவும், தேவையற்ற நமது உடல் அசைவின் மூலமாகவும் நமது சக்திகள் அனைத்தும் வீணாகிறது என்றவர், எப்பொழுதும் அமைதியாகவே இருக்கப் பழகுங்கள். டென்ஷன் அடையவேண்டாம். டென்ஷனாக்கும் இடத்திற்கும், டென்ஷனாக்கும் மனிதர்களையும் தேடிச் செல்லவேண்டாம் என்றார்.

இதனை தொடர்ந்து செய்து வாருங்கள், உங்கள் மனம் அமைதியடைவதைக் காணலாம் என்றார். அதை இன்று வரையிலும் கடைபிடிக்க முயன்றுவரும் நமக்கு.... அவரது நேற்றைய வகுப்பு அடுத்த கட்டத்திற்கு எம்மை அழைத்துச் செல்வதாகவே
அமைந்தது.

மனம் அமைதியான ஒரு நிலையை அங்கு அமர்ந்திருந்தபோது நிகழ்ந்தது. நம்மைச் சுற்றி வெள்ளைநிறம், மஞ்சள்நிறம் மற்றும் பச்சைநிறத்தாலான கதிர்கள் சூழ்வதாகச் சொன்ன போது அவ்வாறே நிகழ்ந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே.

விழா துவங்கும் முன்னர் திரு. மூர்த்தி அவர்கள் பச்சைக் காய்கறிகள் மூலம் இன்ன நோய்களை குணப்படுத்தலாம் என்று சிறப்பாக பேசினார்கள். மேலும் அவர்
என்னிடம் நாகூர் ரூமி அவர்களோடு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசச் சொன்னார். தியானப் பயிற்சியில் கற்றுக் குட்டியாக நாமிருந்த போதிலும், எமக்கு மூச்சுப் பயிற்சியின் மூலம் கிடைத்த சில நல்ல வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும், நாகூர்ரூமி அவர்களின் புத்தகங்களை மீண்டும் நினைவுகூறும் வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

விழாவினை ஏற்பாடு செய்த அனைவரும் எமது இதயங்கனிந்த நன்றி.

- கிராபிக்ஸ் பா.கண்ணன், 11.03.2018.